ஈஷாவில், பாரதத்தின் நதிகளுக்கு புத்துயிரூட்டுவதற்கு, இதில் சம்பந்தப்பட்டிருக்கும் அனைவரின் நன்மையையும் கருத்தில் கொண்டு, முழுமையான, நீடித்து இருக்கக்கூடிய தீர்வு கண்டுபிடிக்கும் உறுதியுடன் நாங்கள் இருக்கிறோம். சுற்றுச்சூழல் துறைகளின் முன்னணி விஞ்ஞானிகளுடன் நாங்கள் கலந்துரையாடி, அரசாங்கத்திடம் பரிந்துரைப்பதற்கு ஒரு விரிவான செயல்திட்ட வரைவை உருவாக்கி வருகிறோம். இதில் சில நிபுணர்கள் கூறும் கருத்துக்களை கீழே பதிவேற்றியுள்ளோம்.

நதிகளுக்கு புத்துயிரூட்டுவதற்கான செயல்திட்ட வரைவை உருவாக்கும்போது, சுற்றுச்சூழல் பணிகளில் தனக்கு இருக்கும் இருபதாண்டு அனுபவத்தையும் ஈஷா கொண்டுவருகிறது. ஈஷாவின் பசுமைக்கரங்கள் திட்டம், ஆசியாவின் மிகப்பெரிய சுற்றுச்சூழல் இயக்கங்களுள் ஒன்று. மக்கள் ஈடுபாட்டுடன், ஈஷா பசுமைக்கரங்கள் திட்டம், தமிழகமெங்கும் 3.2 கோடி மரங்கள் நட்டுள்ளது. கடந்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் பசுமையை அதிகரித்துள்ள ஒரே மாநிலம் தமிழ்நாடு என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் பல தொழில்நுட்ப வல்லுனர்களுடன் இணைந்து, நதிகளுக்கு புத்துயிரூட்டுவதற்கான செயல்திட்ட வரைவை உருவாக்கி வருகிறோம். நதிகளுக்கு புத்துயிரூட்டுவதற்குான பல்வேறு அம்சங்களான மரங்கள் நடுதல், விவசாயிகளின் வாழ்வாதாரம், தொழில் நிறுவனங்கள், அரசு ஈடுபாடு ஆகியவற்றை உள்ளடக்கியதாக இந்த செயல்திட்டம் இருக்கும். அடிப்படைகளை உள்ளடக்கும் ஒரு தாய்த்திட்டத்திற்கான இந்த செயல்திட்ட வரைவு, அரசாங்கத்திடம் அக்டோபர் 2ம் தேதி சமர்ப்பிக்கப்படும். அதற்குப்பிறகு, ஊடகங்களும் பொதுமக்களும் தங்கள் கருத்துக்களையும் உள்ளீடுகளையும் பகிர்ந்துகொள்ள இது வெளியிடப்படும். பிறகு தனிப்பட்ட மாநிலங்கள் மற்றும் அமலாக்கம் குறித்த இன்னும் விரிவான ஆவணங்கள் உருவாக்கப்படும்.

இந்த செயல்திட்ட வரைவை உருவாக்கும் கட்டத்தில், நதிகளிலும் நதிகளுக்கு புத்துயிரூட்டுவதிலும் அனுபவம் மிகுந்தோரின் ஆலோசனைகளையும் பங்களிப்புகளையும் வரவேற்கிறோம். இப்படி பகிர்ந்துகொள்ள ஏதேனும் உங்களிடம் இருந்தால், கேட்டுக்கொள்ள நாங்கள் ஆர்வத்துடன் இருக்கிறோம். எங்களை தொடர்புகொள்வதற்கான மின்னஞ்சல்: Ideas@RallyforRivers.org.