நிலத்தடி நீர் பெருகுவதற்கு மரங்கள் உதவுமா?

வறட்சியான காலங்களிலும் ஆறுகள் வற்றாமல் ஓடுவதற்கு அடிப்படையாக இருக்கும் காரணங்களுள் நிலத்தடி நீரோட்டம் ஒரு முக்கியமான அம்சமாகும். இதைத் தவிர்த்து, நிலத்தடி நீர் பெருகுவது என்பது மக்களுக்கு பெருமளவில் பலனளிக்க கூடியதாகும்; ஏனென்றால் இந்தியாவின் நிலத்தடிநீர் நிலையானது மிக மோசமான நிலைக்கு சென்றுகொண்டிருக்கிறது. 2011ல் இந்தியாவில் ஏறக்குறைய 30% மாவட்டங்களில் நிலத்தடி நீரின் நிலையானது மோசமான அல்லது மிகவும் மோசமான நிலையிலோ உள்ளது. 1995ல் இது வெறும் 8% சதவீதமாக மட்டுமே இருந்தது. “இதே நிலை நீடிக்குமேயானால், அடுத்த 20 வருடங்களில் 60% அளவிற்கு இந்தியாவின் அனைத்து நீராதாரங்களும் ஒரு அபாயகரமான சூழலுக்கு தள்ளப்படும்” என்று உலக வங்கி அறிக்கை சொல்கிறது.

இந்த நிலை மாறுவதற்கு உறுதியான நீர் பாசன முறைகள் மற்றும் மரங்கள் நடுவது ஆகிய அம்சங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. மரங்கள் வெட்டப்படும்போது நிலத்தடி நீரின் அளவு குறைகிறது என்பதற்கு பல உதாரணங்கள் உள்ளன. பெங்களூரூவில் தின்ட்லு அல்லது டொடபோமசன்ட்ரா எனும் ஏரியானது அடர்ந்த மரம் செடி-கொடிகளால் சூழப்பட்டிருந்தது. மேலும் நல்ல நிலத்தடி நீர் வளமும் இருந்தது. ஆனால், வரிசையாக கட்டிடங்கள் வரத்துவங்கியதும் அங்கிருக்கும் மரங்கள் வெட்டப்பட்டன. இதனால் நிலத்தடிநீர் மட்டம் வெகுவாக குறைந்திருக்கிறது. பல்லாயிரக் கணக்கான பறவைகளுக்கு வசிப்பிடமகாவும் இனப்பெருக்க புகலிடமாகவும் இருந்த அந்த ஏரி, இன்று முழுவதுமாக வறண்டு போய்விட்டது. அங்கிருக்கும் குடியிருப்பு பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் 700 அடிக்கு கீழே சென்று விட்டது.

இது போலதான் நகரத்திலிருக்கும் கொரமங்கலா விளையாட்டு கிராமத்தின் நிலையும். மரங்கள் அழிக்கப்பட்டதாலும் கான்கிரீட் கட்டங்கள் வளர்ந்ததாலும் மழைநீர் நிலத்தடிக்கு செல்வது தடங்களாயிற்று. இதனால் அங்கு நிலத்தடி நீர் மட்டம் 600 அடிக்கு கீழ் சென்று விட்டது. அங்குள்ள குடியிருப்பு வாசிகள் இந்த மோசமான சூழலினால் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

நிலத்தடி நீர் அல்லது ஆறுகள் ஓடுவதற்கு ஆதாரமான இந்த அடிப்படை அம்சம் பருவநிலை மாறுபாட்டிற்கும் காரணமாகின்றன. இந்திய துணைக்கண்டமானது அதிகப்படியான வெள்ளம் மற்றும் வறட்சியை சந்திக்கவிருக்கிறது என பல்வேறு ஆய்வறிக்கைகள் சொல்கின்றன. இந்த சூழலில், மரங்கள் நடுவதன் மூலம் மழைநீர் மேலோட்டமாக ஓடி வெள்ளத்தை ஏற்படுத்தாமல் நிலத்தடிக்கு செல்வது உறுதி செய்யப்படுகிறது. நிலத்தடி நீர் நிலையானது; வறட்சி காலத்திலும் நீரோட்டங்கள் இருப்பதை அதிகரிக்கிறது. எனவே வறட்சி நிலை ஏற்படுவது தடுக்கப்படும்.

உணவு உற்பத்தியை பெருக்குவது, மண்ணரிப்பைத் தடுப்பது மற்றும் வெள்ளத்தை கட்டுப்படுத்துவது ஆகியவற்றை அதிகரிக்கும் வகையில் வேளாண் காடுகள் அமைக்கும் தொழிற்நுட்பம் பல்வேறு நாடுகளிலும் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. முயற்சிக்கப்பட்ட மாதிரிகளின் கணக்கீட்டின்படி ஆற்றுப் படுகைகளில் காடுகள் உருவாக்கம் 20-35% வரை செய்யப்படும்போது, 25 ஆண்டுகளில், அங்கு வெள்ள அளவு 10-15% குறைகிறது.

நெல் மற்றும் கோதுமை போன்ற உணவு தானிய பயிர் வகைகளைக் காட்டிலும் நாட்டு மரங்கள் ஒரு கிலோ கிராம் உற்பத்திக்கு குறைவான நீரளவைத்தான் பயன்படுத்துகின்றன. இன்று இந்திய விவசாய சாகுபடியில் 59% உணவு தானிய உற்பத்தியாகவே உள்ளது. உதாரணத்திற்கு, கோதுமைக்கு 1900லிட்/கி.கி நீரளவு தேவைப்படுகிறது. நெல்லுக்கு 3000 லிட்/கி.கி தேவைப்படுகிறது. மாமரத்திற்கு கோதுமையைப் போலவே 1900லிட்/கி.கி நீரளவு தேவைப்படுகிறது. இது நெல்லிற்கு ஆவதைக் காட்டிலும் 30% குறைவு. ஆனால், ஆரஞ்சுகளுக்கு 900லிட்/கி.கி நீரளவு மட்டுமே தேவை. இது கோதுமை எடுத்துக்கொள்ளும் அளவில் பாதியளவு மற்றும் நெல் எடுத்துக்கொள்ளும் நீரளவில் மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவானதாகும். மாதுளைக்கு சுமார் 750லிட்/கி.கி நீரளவுக்கும் குறைவாகவே தேவைப்படுகிறது.