ஒரு தென்னை விவசாயியின் வெற்றி செய்தி
எங்கள் கிராமத்தில் என்னையும் சேர்த்து 60 சதவிகித விவசாயிகள் தென்னை சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். இங்கு 2013-ஆம் ஆண்டு முதல் வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனம் செயற்பாட்டில் உள்ளது. நான் அதன் உறுப்பினர்.
இந்த நிறுவனம் அமைக்கப்படுவதற்கு முன்னர் நாங்கள் இடைத்தரகர்கள் மூலம் தான் தேங்காய்களை விற்றுக் கொண்டிருந்தோம். இந்த நிறுவனம் வந்த பின்னர் தான் வாங்குபவர்களால் நாங்கள் எவ்வாறு சுரண்டப்பட்டு வந்துள்ளோம் என்பதை அறிந்து கொண்டோம். தேங்காயின் உண்மையான சந்தை விலை எங்களுக்கு அப்போது தெரியாது. அந்த தரகர்கள் கூறும் விலை தான் உண்மையான விலை என்று நாங்கள் நம்பிக் கொண்டிருந்தோம். உதாரணத்திற்கு உண்மையான சந்தை விலை ஒரு காய்க்கு ௹.15 என்று இருந்தால் அந்த தரகர் ௹.13 என்று எங்களிடம் கூறுவார். எண்ணிக்கைகளின் அடிப்படையில் தான் அவர்கள் எங்கள் தேங்காய்களை வாங்குவார்கள். ஒரு லோட் குறைந்தது 18,000 முதல் 20,000 காய்களைக் கொண்டிருக்கும். அந்த தரகர்கள் எண்ணுவதற்கு தங்களுடைய ஆட்களைத்தான் கொண்டு வருவார்கள். அந்த எண்ணிக்கையை எங்களால் அறிந்து கொள்ள முடியாது. அதனால் தேங்காய்களின் எண்ணிக்கையிலும் நாங்கள் ஏமாற்றப்பட்டோம்.
இப்போது தேங்காய் விற்கும் அணுகுமுறையில் எனக்கேற்பட்ட மாற்றத்தைப் பற்றி பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஒருமுறை என்னிடம் 28,000 தேங்காய்கள் இருந்தன. அவற்றை விற்பனை செய்ய வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனத்தை அணுகினேன். அதே நாளில் என்னுடன் எப்போதும் வியாபாரம் செய்யும் தரகர் வந்து அவரிடமே அந்த காய்களை விற்குமாறு வற்புறுத்தினார். அவருடன் அனுதாபப்பட்ட நான் 14,000 காய்களை அவரிடம் கொடுத்தேன். மீதமுள்ள 14,000 காய்களை வெள்ளியங்கிரி உழவனுக்கு அனுப்பினேன். அடுத்த நாள் சம்பத்தப்பட்ட இருவரிடம் இருந்தும் தொகை வந்தது. அதைப் பெற்றுக்கொண்ட நான் அதிர்ந்து போய்விட்டேன். அந்த தரகர் கொடுத்த விலையை ஒப்பிட்டு பார்த்தல் வெள்ளியங்கிரி உழவன் மூலம் எனக்கு ௹.11,326 அதிகம் கிடைத்தது. அன்றைய நாளில் நாங்கள் எவ்வாறு தரகர்களால் ஏமாற்றப்படுகிறோம் என்பதை கண்கூடாக அறிந்து கொண்டேன். அன்றிலிருந்து நான் தேங்காய்களை வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனம் மூலம் தான் விற்பனை செய்கிறேன். எங்கள் நிறுவனம் விவசாயிகளுக்கு உண்மையான சந்தை விலையை கொடுக்கிறது. மேலும் இந்த நிறுவனத்தின் மூலம் தென்னை விவசாயிகளுக்கு பல்வேறான பயிற்சிகளும் செயல் விளக்கங்களும் ஏற்படு செய்யப்படுகின்றன. வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனத்துக்கு நன்றி!"
– வி.கிட்டுசாமி (இருட்டுப்பள்ளம் கிராமம், தொண்டாமுத்தூர் பகுதி)