கிராமப் புத்துணர்வு இயக்கத்தின், பொது சுகாதார விழிப்புணர்வு இயக்கமாக ‘ஆரோக்கிய அலை’ 2008 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. உணவு, ஊட்டச்சத்து, நோய் தடுப்பு, தன்சுத்தம் மற்றும் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, சுகாதார விழிப்புணர்வு நிகழ்வுகளும், பொது மற்றும் பல சிறப்பு மருத்துவ முகாம்களும் தமிழகம் முழுவதும் நடத்தப்படுகின்றன.
உலக வங்கி அறிக்கையின்படி,
- ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளில் 3-இல் ஒருவர் இந்தியாவில் வாழ்கின்றனர். இது பெரும்பாலான ஆப்பிரிக்க நாடுகளை விட மோசமானது.
- 0-18 வயதிற்குட்பட்ட குழந்தை பருவ இறப்புகளில் 50%, ஊட்டச்சத்து குறைபாட்டினாலாகும்.
- இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 85 இலட்சம் மக்கள் ஊட்டச்சத்து குறைபாட்டால் இறக்கின்றனர்.
- தமிழகத்தில் உள்ள 60% பெண்களுக்கு ரத்தசோகை உள்ளது.
இதனால் மிகவும் கடுமையாக பாதிக்கப்படுவது குழந்தைகள் தான். ஒரு குழந்தை, உடல் ரீதியாக வளர்ந்து வரும் வேளையில் இது எதிர்மறையாக பாதிக்கிறது. இதனால் ஏற்படக் கூடிய சேதம் பெரும்பாலும் மாற்ற முடியாதது. மேலும் நிரந்தரமானது. இந்தியா உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்று என்றாலும், ஊட்டச்சத்து குறைபாடு அளவு இன்னும் அதிகமாகவே உள்ளது. இந்த சிக்கலை நாம் முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். நீண்ட கால விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய இந்த சூழ்நிலைக்கு, நாம் தீர்வு காண வேண்டும்.
உணவு பற்றாக்குறை மற்றும் போதிய நிதி இல்லாமை மட்டும் ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு காரணங்கள் அல்ல. பல ஆண்டுகளாக, உணவைப் பற்றிய கட்டுக்கதைகளும் தவறான எண்ணங்களும் உருவாகியுள்ளன, தென்னிந்தியாவில் பலர் சத்தான உணவை உட்கொள்வதில்லை. பொதுவாக அதிக விலை கொண்ட உணவுகள் மட்டுமே ஆரோக்கியமானவை என்று நம்பப்படுகிறது. உள்ளூரில் எளிதில் கிடைக்கக்கூடிய உணவுப் பொருட்களின் நன்மைகள் பெரும்பாலும் புறக்கணிக்கப்படுகிறது.
ஆரோக்கியமான உணவை பராமரிக்க பணம் தேவை என்ற கருத்து மக்களிடம் உருவாக்கியுள்ளது. எளிய, விலை குறைந்த தீர்வுகளான, முருங்கை மற்றும் பப்பாளி மரங்களை வளர்ப்பது மற்றும் ராகி, கம்பு மற்றும் குதிரைவாலி போன்ற சிறு தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளை உட்கொள்வது போன்றவற்றை யாரும் நினைவில் கொள்வது இல்லை.
இதில், மக்களிடையே உள்ள, சுத்தம் மற்றும் சுகாதாரம் குறித்த மோசமான அறிவும் சேர்ந்து கொண்டுள்ளது. இதனுடன் ஊட்டச்சத்து குறைபாடும் சேரும் போது மக்கள் பல்வேறு தொற்று நோய்களுக்கு ஆளாகிறார்கள்.
நாம் கவனித்த இன்னொரு முக்கிய காரணம், நாட்பட்ட நோய்களின் அறிகுறிகளைப் பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் இல்லாதது. நோய் தீவிரம் ஆகும் சமயத்தில் தான் இவர்கள் மருத்துவர்களை அணுகுகிறார்கள். இது அவர்களின் நோய் தன்மை மற்றும் இறப்பு விகிதத்தை அதிகரித்தது.