"என் உணர்வு நிலையில் அனைத்து மக்களுக்கும் அவர்களின் ஆன்மீக வெளிச்சமாக இருந்தால் மட்டும் போதும் என்று நினைக்கிறேன். ஏனென்றால் அது தான் எனக்கு நன்றாக தெரிந்த ஒன்று. ஆனால் சமூகத்தில் உள்ள நிதர்சனமான உண்மைகளை புறக்கணிக்க முடியாது. நீங்கள் ஆன்மீகத்தைப் பற்றி மக்களுக்கு அறிவுறுத்த வேண்டுமென்று விரும்பினால் அவர்கள் குறைந்தபட்சம் தேவையான உணவு உண்டு தங்கள் வாழ்வின் அடிப்படை தேவைகளை கொண்டுள்ளார்கள் என்று உறுதி செய்து கொள்ள வேண்டும். இந்த அடிப்படை விஷயங்களை சமூகம் பார்த்துக் கொண்டால் பிறகு குருவுக்கு ஆன்மீக செயல்கள் மட்டுமே செய்தால் போதும் என்ற ஆனந்தம் கிட்டும். ஆனால் அந்த அடிப்படை விஷயங்கள் உறுதி செய்யப்படாத போது நாம் அதற்கான வேலைகளையும் முன்னெடுக்க வேண்டிய சூழலில் உள்ளோம். நான் ஒரு சமூக சீர்திருத்தவாதி அல்ல. ஆனால் உங்களைச் சுற்றி மனித நல்வாழ்வுக்கான அவசர தேவைகள் நிரம்பியிருக்கும் போது அவற்றை புறக்கணிக்க முடியாது.
"கிராமப்புற சமுதாயங்களில் சீர்கெட்டு போன சமூக நிலையை மாற்றியமைத்து அங்குள்ள மனிதர்கள் மலர்வதற்கு உகந்த சூழலை உருவாக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டது “கிராம புத்துணர்வு இயக்கம்”. கிராமப்புற மக்களின் வாழ்க்கை சூழலை மாற்றியமைத்து அவர்கள் தங்கள் முழுத்திறனோடு தாங்கள் செய்ய விழையும் காரியங்களை செயல்படுத்த வேண்டும் என்பதே இந்த இயக்கத்தின் அடிப்படை நோக்கம் ஆகும். மக்களின் பொருளாதார மேம்பாடு என்பது ஒரு முக்கியமாக கையாளப்படவேண்டிய ஓன்று என்றாலும் அதற்காக மட்டும் உருவாக்கப்பட்டதல்ல இந்த திட்டம். மனித ஆன்மபலத்தை மேம்படுத்தி அவர்களுக்காக அவர்களே எழுந்து செயல்படும் உத்வேகத்தை அளிப்பதே இதன் முக்கிய நோக்கம்."