கொரோனா காலத்தில் மனிதநேயத்தை நிரூபிக்கும் 5 நிகழ்வுகள்: #BeatTheVirus
உலகம் முன்னெப்போதும் கண்டிராத வகையில் சவாலான இந்த சூழ்நிலையில், பல கிராமப்புற மக்கள் தங்களுக்கான அடிப்படை வாழ்வாதாரத்தை இழந்து அடுத்தவரிடம் இருந்து உதவியை எதிர்பார்க்கும் சூழலுக்கு எப்போதோ சென்றுவிட்டனர். இத்தகைய துன்பமான காலங்களிலும், மிகவும் உத்வேகம் தரும் நிகழ்வுகள் மனிதகுலத்தின் மேன்மையை நமக்கு நினைவூட்டுகின்றன.

கொரோனா வைரஸ் தொற்று பரவும் இந்நேரத்தில், அன்றாடம் மக்களின் மனதை நெகிழச் செய்யும் நிகழ்வுகளையும், மனிதநேயமிக்க செயல்களையும் பார்ப்பது நம்பிக்கை அளிப்பதாய் உள்ளது. பல்வேறு சவால்கள் மற்றும் இடையூறுகள் இருக்கும்போதிலும், தொற்றுநோயைக் கையாள்வதில் கிராமப்புற சமூகங்கள் ஒற்றுமையுடன் ஒன்றிணைகிறார்கள். ஒற்றுமையின் மூலம் இதுபோன்ற சவாலான காலங்களை மனிதகுலம் வெல்லமுடியும் என்ற நம்பிக்கையையும் அவர்கள் நமக்குத் தருகின்றனர். இங்கே நம் நெஞ்சை நெகிழவைக்கும் ஐந்து கதைகள், மனிதர்கள் ஒருவருக்கொருவர் உதவுவதன் உயர்வை எடுத்துரைக்கிறது.
1. நன்றியை வெளிப்படுத்திய கரும்பு...

ஈஷா தன்னார்வலர் பிரேம்குமார் அண்ணா மூலக்காடுப்பதியில் தன் தினசரி பணிகளை செய்து வந்தபோது சாலையோரத்தில் அமர்ந்து ஒரு சிறுவன் கரும்பை சுவைத்துக் கொண்டிருப்பத்தைக் கண்டார். பிரேம்குமார் அந்த சிறுவனை அணுகி பேச்சு கொடுத்தார். அந்த சிறுவனிடம் கரும்பு பிடித்திருக்கிறதா என்று விசாரித்தபோது குறும்பாக சிரித்தபடி அந்த சிறுவன் அங்கிருந்து ஓடினான்.
சிறிது நேரத்தில் தன் தாயோடு வந்த அந்த சிறுவன் அருகில் இருந்த அவர்களின் வயலுக்கு பிரேம்குமாரை அழைத்துச் சென்றான். தங்களின் வயலிலிருந்து கரும்பை வெட்டியெடுத்து, தங்கள் நன்றியினை வெளிப்பாடாக அவர்கள் அதை பிரேம்குமாருக்கு வழங்கினர். அந்த சிறுவனின் தாய் கூறினார், "நீங்களும் மற்ற தன்னார்வலர்களும் எங்களுக்கு செய்யும் உதவிக்கு மிக்க நன்றி சொல்கிறேன். நீங்கள் அனைவரும் எங்கள் கிராமத்துக்கு பெரும் நன்மையை செய்கின்றீர்கள்."
2. மூதாட்டியின் வெள்ளை மனம்

சமணப்புதூர் கிராமத்தில் தன்னார்வத் தொண்டர்கள் ஒவ்வொரு வீடாக சென்று கிராமம் முழுவதும் அனைவரும் உணவு பெற்றிருப்பதை உறுதி செய்துகொண்டிருந்தனர். ஒரு மூதாட்டியின் இல்லத்தை அடைந்தபோது அவர்களுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. தன்னார்வலர்கள் எடுத்துச்சென்ற உணவை, கிராமத்தில் வேறு யாருக்காவது வழங்குமாறு கேட்டுக்கொண்டார் அந்த மூதாட்டி.
தன்னார்வத் தொண்டரான ஜெயகுமார் அண்ணா இதற்கான காரணத்தை விளக்குகிறார்: "தனது பேரப்பிள்ளை நம்மிடமிருந்து உணவைப் பெற்றுக்கொண்ட குழந்தைளில் ஒருவன் என்பதை குறிப்பிட்ட மூதாட்டி, தனது பேரன் உணவை தன்னுடன் பகிர்ந்து கொண்டதையும் குறிப்பிட்டு, அதுவே தங்களுக்கு போதுமானதாக இருந்தது என்பதை நன்றியுடன் பகிர்ந்து கொண்டார். பசியோடு இருக்கும் வேறு யாருக்காவது இந்த உணவு தேவைப்படும் என்று கூறி, சக மனிதர்கள் மீது அக்கறையோடு வாழ்த்தி வழியனுப்பினார். எளிமையான மனிதர்களின் இதயத்தில் அன்பு அமுதசுரபியாக இருக்கிறது, எப்போதும்!”
3. சிறுவர்களின் உற்சாக உதவிக்கரம்

8 வயதே நிரம்பிய சிறுவர்கள் சூர்யா மற்றும் ஸ்ரீனிவாஸ் தங்களுக்குள் இருந்த வேற்றுமையை விடுத்து, அவர்களுக்குள் சண்டை போடுவதையும் மறந்தனர். ஈஷா தன்னார்வலர்களோடு சேர்ந்து மக்களுக்கு உதவ வேண்டும் என்ற ஆசை அவர்களின் குழந்தைத்தனமான போட்டியையும் தணித்தது.
அந்த இரட்டையர் முதலில் தக்காளி அறுவடை செய்வதில் தன்னார்வலர்களுக்கு உதவினர். பின்னர் உற்சாகமாக தங்களுக்கு பிரியமான நிலவேம்பு கசாயத்தை மக்களுக்கு விநியோகிக்க உதவினர். ஒரு தன்னார்வலர் கூறினார், "அவர்கள் எங்களோடு இணைந்து எங்கள் பணிகளில் உதவினர். கட்டுப்பாடுகளை கடைபிடிப்பதிலும், ஒருவருக்கொருவர் அக்கறை எடுத்துக்கொள்வதிலும், இந்தக் குழந்தைகள் அங்குள்ள கிராமப்புற மக்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கின்றனர்."
4. ஒன்றிணையும் விவசாய பெருமக்கள்

கொரோனா வைரசுக்கு எதிரான இந்த யுத்தத்தில் விவசாயிகள் விளைபொருட்களை நன்கொடையாக அளித்து, உள்ளூர் சமூகத்தினரிடம் நிலையான ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றனர். அவர்களின் தேவைக்கு குறைவான பொருட்களே இருந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் விவசாயிகள் வழங்கும் தாராளமான நன்கொடை, நம் தான்னார்வலர்களையும் பெரும் உற்சாகத்தோடு தங்கள் பணிகளை மேற்கொள்ளச் செய்கிறது. கோவை கிராமங்களில் யாரும் பட்டினியில் இருக்கக்கூடாது என்ற முனைப்போடு அவர்கள் அனைவருக்கும் உணவு வழங்கி வருகிறார்கள்.
ஆலந்துறை பஞ்சாயத்து உழவர் உற்பத்தியாளர் அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர் தனசேகர் அவர்கள் 25 கிலோ அரிசி கொண்ட 20 அரிசி மூட்டைகளை நன்கொடையாக நம் தன்னார்வலர்களுக்கு வழங்கினார்.
தொண்டாமுத்தூர் கிராமத்தில் முருகேசன் என்ற சிறு விவசாயி சமீபத்தில் 15 கிலோ சுரைக்காயை நன்கொடையாக அளித்துள்ளார். இருட்டுப்பள்ளத்தைச் சேர்ந்த இன்னொரு விவசாயி 25 கிலோ பலாப்பழமும் 14 கிலோ மாம்பழமும் வழங்கியுள்ளார்.
இத்தகைய பரிவான நிகழ்வுகள் ஏதோ ஒன்றிரண்டு அல்ல. கோவை கிராமங்களில் பெரும்பாலான இடங்களில் இத்தகைய கருணையின் வெளிப்பாடாகும் செயல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. தன்னார்வத் தொண்டர்களுக்கு துணைநிற்கும் விதமாக விவசாயப் பெருமக்கள் இவ்வாறு தங்கள் விளைபொருட்களை நன்கொடையாக வழங்கி ஒற்றுமையைக் காட்டுகின்றனர்.
5. மெக்கானிக் வேலை மூலம் உதவி...

ஒரு கிராமத்தில் ஈஷா தன்னார்வலர்களின் வாகனம் ஒன்றின் கதவு பழுதடைந்தபோது அங்கிருந்த ஒரு தன்னார்வத் தொண்டரான சசி அண்ணா வந்து உதவினார். ஆட்டோ பழுது பார்ப்பதில் தனக்கிருந்த திறமையை நன்முறையில் பயன்படுத்தி அந்த கதவை அவர் சரிசெய்தார்.
தன்னார்வலர்கள் அவரின் அந்த சேவைக்கு பணம் வழங்கியபோது அதை வாங்க மறுத்த அவர், "பற்பல வழிகளில் நீங்கள் எங்களுக்கு உதவுகிறீர்கள். இது நான் உங்களுக்கு திருப்பி செலுத்தும் ஒரு எளிய வாய்ப்பாக இருக்கட்டும்," என்று கூறினார். மேலும் அவர் கூறும்போது, "சும்மா உட்கார்ந்து கொண்டு வெட்டிக்கதை பேசி பொழுதைக் கழித்துக் கொண்டிருந்த எனக்கு, சத்குரு இப்போது பிறருக்கு ஏதோ ஒருவகையில் உதவியாக இருக்க வாய்ப்பு அளித்துள்ளார்" என்றார்.
மனிதநேயம் எப்போதும் முதன்மையாக உள்ளது என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த கிராமப்புற சமூகங்களைச் சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்துள்ளனர். சமூக விலகல் கடைபிடிக்கப்படும் இந்நேரத்தில், அவர்கள் சமூக உணர்வை உயிர்ப்புடன் வைத்து, வைரஸை வெல்லும் நோக்கில் ஒன்றிணைந்துள்ளனர்.
ஈஷாவின் முயற்சிகள் பற்றி மேலும் அறிந்துகொள்ள, வாருங்கள்: http://Isha.co/BeatTheVirus