ஈஷா ஆரோக்கிய அலை - 6000 மக்களுக்கு வழங்கப்பட்ட இலவச முழு உடல் பரிசோதனை
அப்பல்லோ மருத்துவமனை மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனையோடு இணைந்து ஈஷா அறக்கட்டளை நவம்பர் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் இலவச மருத்துவ முகாம் நடத்தியது. இதில் 6,000-க்கும் மேலான மக்கள் பங்கு கொண்டு பயன் பெற்றனர்.
அப்பல்லோ மருத்துவமனை மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனையோடு இணைந்து ஈஷா அறக்கட்டளை நவம்பர் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் இலவச மருத்துவ முகாம் நடத்தியது. இதில் 6,000-க்கும் மேலான மக்கள் பங்கு கொண்டு பயன் பெற்றனர். இந்த முகாமில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் என 200 பேர் கொண்ட குழு செயல்பட்டது. ஆலாந்துறை அரசு மேல்நிலை பள்ளியில் நடத்தப்பட்ட இந்த முகாமில் முழு உடல் பரிசோதனை மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.
பல்வேறான நோய்களை கண்டறிந்து அவற்றுக்கான முறையான சிகிச்சை அளிக்கும் அடிப்படை கட்டமைப்புகள் இந்திய கிராமப்புற மக்களில் பெரும்பாலோனோருக்கு கிடைப்பதில்லை. இத்தகைய அடிப்படை வசதி இல்லாத நிலை கிராமப்புற மக்களுக்கு பெரும் துன்பத்தை அளிப்பதோடு மட்டுமல்லாமல் அவர்களின் வாழ்க்கைத் தரத்தையும் பெரிதாக பாதிக்கிறது. இந்த நிலை மாறுவதற்கு ஈஷா கிராம புத்துணர்வு இயக்கம் "ஆரோக்கிய அலை" என்ற இலவச மருத்துவ முகாம்களை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்தி நோய்களைக் கண்டறிந்து அவற்றுக்கான ஆரம்ப சிகிச்சையை வழங்கி வருகிறது.
நீரிழிவு நோய், இரத்த அழுத்தம், இருதய கோளாறுகள், எலும்பு மற்றும் மூட்டு பிரச்சனைகள், சிறுநீரக கோளாறுகள், காது மற்றும் தொண்டை சம்பத்தப்பட்ட பிரச்சனைகள், வயிறு மற்றும் குடல் சார்ந்த பிரச்சனைகள், தைராய்டு பிரச்சனைகள், பல் பிரச்சினைகள், பொதுவான உடல்நலச் சிக்கல்கள் மற்றும் பெண்கள், குழந்தைகள், முதியோர் ஆகியோரின் பிரத்யோகமான பிரச்சனைகள் போன்ற பெருவாரியான நோய்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. இசிசீ(ECG), நுண்ணொலி நுண்ணாய்வு (அல்ட்ராசவுண்ட்), எக்ஸ்ரே மற்றும் மின் ஒலி இதய வரைவு (எக்கோ) போன்ற வசதிகளும் வழங்கப்பட்டன.
சிகிச்சை பெற்ற 6,358 பேரில் 3,100 பேர் முதல் நாளும் 3,258 பேர் இரண்டாம் நாளும் பரிசோதிக்கப்பட்டனர். 2,250 பேருக்கு இரத்த சர்க்கரை பரிசோதிக்கப்பட்டது. மேலும் 120 பேருக்கு முழு இரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 265 பேருக்கு இசிசீ மற்றும் எக்ஸ்ரே பரிசோதனைகள் செய்யப்பட்டன. வாழ்வை சீரமைக்கும் பல சிகிச்சைகள் இந்த ஆரோக்கிய அலை முகாமில் வழங்கப்பட்டன. அதில் 75 பேருக்கு அரவிந்த் கண் மருத்துவமனையில் நிகழ்த்தப்பட்ட கண்புரை அறுவை சிகிச்சையும் அடங்கும். அதன் மூலம் பல வருடங்களாக கிட்டத்தட்ட பார்வையில்லாமல் இருந்த அந்த 75 பேரும் பார்வை பெற்றனர்.
அந்த முகாமில் பங்குகொண்டோர் அதன் பின்னர் தங்கள் சிகிச்சையை ஆலாந்துறையில் உள்ள ஈஷா கிராம மருத்துவமனையில் பெற்று கொள்ள முடியும். நீண்ட கால நோய்களினால் அவதிப்படும் கிராம மக்களுக்கு அங்கு குறிப்பிட்ட காலத்துக்கு இலவச மருந்துகளும் வழங்கப்படும். உயர்நிலை சிகிச்சை தேவைப்படுவோருக்கு தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு முதல்வரின் விரிவான சுகாதார காப்பீட்டு திட்டத்தின் மூலம் சிகிச்சை அளிக்கப்படும். அருகாமையில் உள்ள கிராமங்களில் இருந்து பயணிப்போருக்கு இலவச போக்குவரத்து வசதி செய்து தரப்படும்.
இது போன்ற முழு சோதனை பெரும்பாலும் விலை மிகுந்ததாக இருக்கும். இருப்பினும் மருத்துவ முகாமில் இவை அனைத்தும் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த முகாம்களின் மூலம் மருத்துவ பரிசோதனை நோய் அறிவதற்காக மட்டும் தான் என்ற எண்ணம் அகற்றப்படுகிறது. மருத்துவ பரிசோதனை என்பது ஆரோக்கியத்தின் மதிப்பீடு. 35 வயதை கடந்தவர்களுக்கு அந்த பரிசோதனை குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து செய்யப்பட வேண்டும். இந்த பரிசோதனைகளுக்கான செலவு தவிர கிராம மக்களுக்கு 11 லட்சம் மதிப்புள்ள இலவச மருந்துகளை அப்பல்லோ மருத்துவமனை வழங்கியது.
இந்த நிகழ்வில் பட்டய வகுப்பு (டிப்ளோமா), இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பயிலும் 200 மாணவர்களுக்கு 20 லட்ச ரூபாய் மதிப்பிலான கல்வி உதவித்தொகை உயர் கல்விக்கான ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டது. பொருளாதார நிலையில் பின்தங்கி இருக்கும் குடும்பத்தில் இருந்து வரும் சிறந்த கல்வி திறன் உள்ள தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் இந்த கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. பொருளுதவியாக வழங்கப்படும் இந்த உதவித்தொகையை மாணவர்கள் தங்களுக்கான புத்தகங்களை வாங்கவோ கல்விக்கட்டணம் செலுத்தவோ பயணம் மற்றும் அன்றாட செலவுகளுக்காகவோ உபயோகித்துக் கொள்ளலாம்.
ஈஷா கிராம புத்துணர்வு இயக்கம் நடத்திய இந்த முகாமில் சத்குரு அவர்களால் தொடங்கப்பட்ட ஒரு முக்கிய திட்டம் ஈஷா அறக்கட்டளை மூலம் தமிழகத்தின் 60 கிராமங்களை தத்தெடுப்பது ஆகும். தத்தெடுத்த அந்த கிராமங்களை ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கான முன்மாதிரியாக மாற்றுவதே இந்த திட்டத்தின் நோக்கம். இதன் மூலம் எவ்வாறு நன்றாக வாழ்வது, ஆரோக்கியமாக இருப்பது, ஆரோக்கியம் மேம்பட யோகாவின் பங்கு, தன்னையும் தன் சுற்றுச்சூழலையும் தூய்மையாக வைத்திருப்பதன் முக்கியத்துவம் ஆகியவற்றினை பற்றிய கல்வியை வழங்குவதன் மூலம் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை மேம்படுத்த ஈஷா திட்டமிட்டுள்ளது. வரும் வருடங்களில் செயற்பாட்டிற்கு வரும் இந்த பிரமாண்ட திட்டத்தின் முதற்கட்ட நிகழ்வு இது.